மாலையிடல்:
சபரிமலை புனிதப் பயணம் என்பது உணர்ச்சிகளின் ஒரு சோதனைதான். மாலையிட்டு, மலை சவிட்டி, திரும்பி வரும்வரை பக்தர்கள் எளிய வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும். இது ‘விரதம்’ என அறியப்படுகின்றது.
ஒரு பக்தன் எப்பொழுது மாலை இடுகின்றானோ அன்றிலிருந்து விரதம் ஆரம்பமாகின்றது. மலைப்பயணம் செய்து சுவாமியை தரிசிக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளிப்படுத்துவதற்காகவே மாலை அணியப்படுகிறது. இதனை மாலையிடல் என்பர்.
பக்தர்கள் துளசிமாலை அணிவது வழக்கம். அதில் ஐயப்ப உருவம் பொறித்த ‘லாக்கெட்’ கோக்கப்பட்டிருக்கும். மாலை அணிந்துவிட்டால், பக்தர்கள் உலகியல் இன்பங்களிலிருந்து விடுபட்டு எளிய வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்.
புகை பிடித்தல், மதுவருந்துதல் போன்ற தீய பழக்கங்களைக் கட்டாயமாக விட்டுவிடவேண்டும். பக்தர்கள் இல்லற இன்பங்களிலிருந்தும் விடுபட்டிருக்கவேண்டும்.
பூஜைகள் செய்தபின் ஏதேனும் கோயில் பூஜாரியோ குருசுவாமியோ பக்தனுக்கு மாலை அணிவிப்பார். பதினெட்டு முறை புனித மலைப்பயணம் செய்து சுவாமி ஐயப்பனை தரிசித்தவர்கள் குருசுவாமி எனறியப்படுவர்.
பக்தர்களின் வீட்டு பூஜை அறையில் வைத்தும் மாலை அணியலாம்.
மலைப்பயணம் செய்து திரும்பி வந்தபின் மாலையைக் கழற்றலாம்.
மண்டல விரதம்:
ஒரு மண்டலம் என்பது 41 நாட்கள். இந்நாட்களில் பக்தர்கள் மேற்கொள்ளும் விரதமே மண்டல விரதம். மண்டல விரதக் காலத்தில் பக்தர்கள் எளிய வாழ்க்கை நடத்துவர். மாலை அணிந்துவிட்டால் விரதம் தொடங்கிவிட்டதாகப் பொருள். சனிக்கிழமை அல்லது சுவாமி ஐயப்பனின் பிறந்த நட்சத்திரமான உத்திர நன்னாளில் மாலை அணிவது வழக்கம்.
வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கவும், உற்சாகத்தை ஏற்படுத்தவும், ஆரோக்கிய வாழ்வு வாழவுமே மண்டல விரதம் மேற்கொள்ளப்படுகிறது. சுயக் கட்டுப்பாடும் இதன் ஒரு முக்கிய நோக்கமாகும்.
விரத நாட்களில் கறுப்பு ஆடை அணிவது வழக்கம். உலகியல் இன்பங்களிலிருந்து விடுபட்டிருக்கும் நிலையையே கறுப்பு நிறம் குறிப்பிடுகிறது. இக் கால அளவில் முடி வெட்டுவது, க்ஷவரம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கெட்டு நிறைத்தல்:
சபரிமலை புனிதப் பயனத்தின்போதும் வழிபாட்டிற்கும் தேவையான பொருட்களை துணிப்பைக்குள் நிறைப்பதே கெட்டு நிறைத்தல் (கட்டு நிறைத்தல்) இதனை ‘இருமுடிக் கெட்டு’ என்பர். குருசுவாமியின் முன்னிலையில் கெட்டுநிறைத்தல் நடைபெறும். தலையில் இருமுடிக்கெட்டுடன் செல்கின்ற பக்தர்கள் மட்டுமே புனிதமான பதினெட்டு படிகள் ஏறி சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இருமுடிக்கெட்டு இல்லாதவர்கள் வேறு வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிக்கலம்.
ஆரம்ப பூஜைகளுக்குப் பின் தேங்காயில் பசு நெய் நிறைக்கப்படுகிறது. முன்னதாக சகிரி நீக்கி தேங்காய் சுத்தமாக்கப்படுகிறது; தேங்காய் நீர் ஒரு சிறு துளை வழியாக வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு செய்வது, உள்ளத்திலிருந்து உலகியல் இன்பங்களை வெளியேற்றி, ஆன்மீகச் சிந்தனைகளை நிறைப்பதன் குறியீடாகக் கருதப்படுகின்றது. இவ்வாறாக ஐயப்பனுக்காக நெய் நிறைக்கப்படும் தேங்காய் ‘நெய்த்தேங்காய்’ என அறியப்படுகின்றது.
இரண்டு பகுதிகளுள்ள இருமுடிக்கெட்டின் முன் பகுதியில் நெய்த்தேங்காவும், ஐயப்பனுக்கும் பிற தேவர்களுக்குமான வழிபாட்டுப் பொருட்களும் நிறைக்கப்படுகின்றன. பின்னர் நூலால் பத்திரமாகக் கட்டிவைப்பர். இருமுடிக்கெட்டின் இப்பகுதி ஆன்மீக சக்தி வாய்ந்ததாகும். கோயில் வளாகத்தில் ஆங்காங்கே உடைக்கவேண்டிய தேங்காய்கள் கட்டின் அடுத்த பகுதியில் நிறைக்கப்படுகின்றன.
பேட்டை துள்ளல்:
பேட்டை துள்ளல் ஒரு சடங்காகும். சுவாமி ஐயப்பன், மஹிஷி என்னும் துர்தேவதையை கொன்று வெற்றிகொண்டதன் நினைவாக பேட்டைதுள்ளல் ஆட்டம் ஆடப்படுகின்றது. ஆண்டுதோறுமுள்ள சபரிமலை புனிதப் பயணக்காலம் ஆரம்பித்ததன் அறிகுறியாகவும் இது நடத்தப்படுகிறது.
வழக்கமாக முதலில் அம்பலப்புழை குழுவினர் முதலில் பேட்டை துள்ளல் நடத்துகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் இக்குழுவில் இருப்பர். மத்தியான நேரம் பேட்டை சந்திப்பில் உள்ள ’கொச்சம்பலம்’ (சிறிய கோயில்) பகுதியில் நின்று வானத்தில் வட்டமிடும் பருந்தை தரிசித்தபின் பேட்டை துள்ளல் என்னும் ஆட்டமும் பாட்டும் ஆரம்பமாகும். சுவாமி ஐயப்பனின் நெருங்கிய நண்பராக இருந்த வாவர் சுவாமிகளுக்குரிய மரியாதையாகவும் பேட்டை துள்ளலைக் கருதுவர். குழுவினர் நயினார் பள்ளி வழியாக சாலையைக் கடந்து மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப்பாடிச் செல்வர். இவ்வாறு ஆடிச் செல்கின்ற அம்பலப்புழை குழுவினரை, எருமேலி மஹல்லு ஜமாஅத் கமிட்டித் தலைவர்கள் முறைப்படி வரவேற்று அவர்களுடன் செல்வர். அவர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலை (வலியம்பலம்- பெரிய கோயில்) சென்றடைந்ததும் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் அம்பலப்புழை குழுவினரையும் ஜமாஅத் தலைவர்களையும் வரவேற்பர்.
மதியத்திற்குப் பின் பகல் வெளிச்சத்தில் ஆகாயத்தில் நட்சத்திரத்தை தரிசித்தபின், ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் ஆரம்பமாகும். துள்ளலுக்குப் பின் இரண்டு குழுவினரும் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் இரவுநேரம் தங்கிவிட்டு, அடுத்தநாள் பம்பைக்குப் புறப்படுவர். அங்கு அவர்களுக்கு விருந்துச் சாப்பாடு (பம்பா சத்யை) வழங்கப்படும். தொடர்ந்து அவர்கள் மகரவிளக்கு விழா காண சன்னிதானத்தைச் சென்றடைவர்.
பரம்பரை வழி:
சபரிமலையைச் சென்றடைய பல வழிகள் உள்ளன. அவற்றுள் எருமேலி வழி, வண்டிப்பெரியார் வழி, சாலக்கயம் வழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.. எருமேலி வழியாகச் செல்லும் பாதை பரம்பரை வழியாகக் கருதப்படுகின்றது. ஐயப்பன் மஹிஷையைக் கொல்வதற்கு இப்பாதை வழியாகத்தான் சென்றார் எனக் கூறப்படுகிறது. சபரிமலைக்குச் செல்லும் மிகக் கடினமானபாதையும் இதுதான். இந்தப் பாதை வழியாகச் செல்கின்றவர்கள், சுமார் 61 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பாதைகளில் நடந்தும் மலை ஏறியும் பயணம் செய்யவேண்டும். இவ்வழியாகச் செல்கின்றவர்கள் ஆங்காங்கே சில குறிப்பிட்ட பகுதிகளில் தங்கிச் செல்வர். இப்பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், எருமேலியிலுள்ள ஸ்ரீதர்ம சாஸ்தாவையும் வாவர் சுவாமியையும் வணங்கிவிட்டுப் பயணத்தை ஆரம்பிப்பர்.
எருமேலியிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ’பேரூர் தோடு’. ஐயப்பன் தன் பயணத்தின்போது இங்குதான் ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. சபரிமலை ஏறுவது இங்கிருந்துதான் என்பதாலும் இவ்விடம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த இடத்தை அடைந்ததும் பக்தர்கள் ஐயப்பனிடம் அடைக்கலம் கேட்டு சரணமந்திரங்கள் எழுப்புவதையும் கேட்கலாம். பேரூர் தோட்டிற்குப் பின்னால் அமைந்த காட்டுப்பகுதி ‘பூங்காவனம்’ என்று அறியப்படுகின்றது.
எருமேலிப் பாதையின் அடுத்த முக்கிய இடம் ‘காளகெட்டி’ (காளையைக் கட்டிய இடம்). இது பேரூர் தோட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஐயப்பன் மஹிஷியைக் கொல்லும் காட்சியை நேரடியாகக் காண சிவபெருமான் வந்தார் என்றும், அந்நேரம் அவர் தன்னுடைய வாகனமாகிய காளையை இங்குத்தான் கட்டியிட்டார் என்றும் நம்பப்படுகின்றது. இங்கு அமைந்துள்ள கோயிலில் தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபடுவர்.
காள்கெட்டியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ‘அழுதை’ என்னும் ஆறு ஓடுகிறது. இது பம்பையின் ஒரு கிளை நதி. பக்தர்கள் அழுதை ஆற்றிலிருந்து சிறு கற்களைப் பொறுக்கி பாதுகாத்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர் அவர்கள் செங்குத்தான அழுதைக் குன்றில் ஏறுகின்றனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரம் கொண்ட இக் குன்றில் ஏறுவது மிகவும் கடினமாகவே இருக்கும். அழுதைக் குன்றின் மேற்பகுதி ’கல்லிடும்குன்று’ என அறியப்படுகின்றது. இங்கு பக்தர்கள் அழுதையாற்றிலிருந்து எடுத்துவந்த கற்களை கீழ்நோக்கி எறிகின்றனர். கொல்லப்பட்ட மஹிஷியின் உடற்பகுதிகளைக் கீழ்நோக்கி எறிவதன் அறிகுறியாகக் கல்லெறியும் சடங்கு நடத்தப்படுகிறது.
இரண்டாவது வழி:
சபரிமலைக்குச் செல்லும் இரண்டாவது வழியாக ‘இஞ்சிப்பாறைக்கோட்டை’ வழியைச் சொல்லலாம். இங்கும் ஒரு சாஸ்தா கோயில் உள்ளது. அக் கோயில் ‘கோட்டையில் சாஸ்தா’ கோயில் என அறியப்படுகின்றது. பக்தர்கள் இங்கும் வழிபாடுகள் நடத்துகின்றனர். வழுக்கலான இங்குள்ள பாதை ’கரிமலைத் தோட்டில்’ முடிவடைகிறது. இத் தோட்டின் ஒரு பக்கம் அழுதை குன்றும் இன்னொரு பக்கம் கரிமலைக் குன்றும் உள்ளன. கரிமலை யானைகள் நடமாட்டம் அதிகமான பகுதியாகும். அவை நீர் அருந்த கரிமலைத் தோட்டிற்கு வருவது வழக்கம். கடுமையான குளிரைத் தாங்குவதற்கும், யானைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துகொள்வதற்கும் பக்தர்கள் சுற்றிலும் தீ மூட்டுவர். கரிமலை ஏழு அடுக்குகளைக் கொண்ட ஒரு மலையாகும். அதனால் கட்டம்கட்டமாகவே பக்தர்கள் பயணத்தை மேற்கொள்வர். ஐந்து கிலோமீட்டர் நீண்டு செல்லும் இப்பாதை பக்தர்களுக்கு மிகவும் கடினமாகவே இருக்கும். ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என சரண மந்திரத்தை உரக்கச் சொல்லிக்கொண்டு பக்தர்கள் தங்கள் களைப்பை மறப்பர். கரிமலையின் உச்சியில் பரப்பான ஒரு பகுதி உண்டு. பக்தர்கள் அங்கே ஓய்வெடுத்துக்கொள்வர். இங்கே ஒரு கிணற்றுக்குள் இன்னொரு கிணறு காணப்படுகிறது. அது ‘நாழிக்கிணறு’ என அறியப்படுகின்றது.மிகவும் சுத்தமான நீர் இங்கு ஊற்றெடுத்து வரக் காணலாம். பக்தர்கள் தங்கள் தாகத்தையும் களைப்பையும் அகற்ற இந்நீரைப் பயன்படுத்துவர். இங்கு பல்வேறு கடவுளர்க்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கரிமலந்தன், கொச்சு கடுத்த சுவாமி, பகவதி ஆகியோர் முக்கிய தெய்வங்கள்.
மூன்றாவது வழி:
சுமார் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து, வலியானவட்டம், செறியானவட்டம் ஆகிய பகுதிகளைக் கடந்தால் பம்பை நதிக்கரையை அடையலாம். பந்தள நாட்டு அரசர் ராஜசேகரன் இந்நதிக்கரையில்தான் குழந்தை ஐயப்பனைக் கண்டெடுத்தார் என்பதால் பம்பை நதிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. கங்கையைப் போன்று பம்பையையும் ஒரு புண்ணிய நதியாகவே கருதுவர். இந்நதியில் முங்கி எழுந்தால் எல்லா தீமைகளும் நீங்கப்பெற்று புனிதமாகலாம் என்பது நம்பிக்கை. பம்பையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சன்னிதானம் உள்ளது. நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், சரம்குத்தி சன்னிதானத்திற்குச் செல்லும் வழியிலுள்ள முக்கிய இடங்கள்.
”வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் கொண்டதுதான். உயரங்களை எட்ட வேண்டுமானால் கடின முயற்சி எடுக்கவேண்டும்.” சாரிமலைப் பயணம் நமக்குக் கற்பிக்கும் பாடம் இதுதான்.
உற்சவம்:
ஆண்டுதோறும் மலையாள மீன மாதத்தில் அதாவது, தமிழ் பங்குனி மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) சபரிமலைக் கோயிலில் விழா நடைபெறும். உற்சவக் காலத்தில் பத்து நாட்கள் கோயில் திறந்திருக்கும்.
கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகும். தொடர்ந்து பத்து நாட்களும் ‘உற்சவபலி’, ஸ்ரீபூதபலி போன்ற சிறப்புப் பூஜைகள் நடைபெறும். ஒன்பதாவது நாள் பள்ளிவேட்டை அரங்கேறும். ஐயப்பன் ஊர்வலமாகச் சென்று சரம்குத்தி என்ற இடத்தில் வேட்டையாடுவதே பள்ளிவேட்டை. பின்னர் பம்பையாற்றில் புனித ஆறாட்டு (நீராட்டு) நடைபெறும்.
பங்குனி மாதம் உத்திர நாளன்று நடைபெறும் ’பங்குனி உத்திரத்துடன்’ ஆண்டு உற்சவம் நிறைவு பெறும். உத்திரம் ஐயப்பனின் பிறந்த நட்சத்திரமாகும்.