ஸ்ரீ ஐயப்பசுவாமி குடிகொள்ளும் சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில், கேரளத்திலுள்ள சாஸ்தா கோயில்களில் மிகவும் பழமை வாய்ந்ததும் பெருமை வாய்ந்ததும் ஆகும்.பத்தனம்திட்டை மாவட்டத்தில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள சபரிமலை என்ற மலைமீது பெருமை வாய்ந்த இக்கோயில் அமைந்துள்ளது.
எல்லா மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம். கோயில் சன்னிதானத்திற்கு மிக அருகில் கிழக்குப் பக்கமாக வாவர் (ஐயப்பசுவாமியின் மிக நெருங்கிய நண்பர்) என்பவருக்கான ஓர் இருப்பிடம் உள்ளது. ‘வாவர் நடை என அறியப்படும் இவ்விடம் மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இக்கோயிலின் இன்னொரு தனித்தன்மை என்னவென்றால், வருடம் முழுவது இக்கோயில் திறந்திருப்பதில்லை என்பதுதான். மண்டலபூஜை, மகரவிளக்கு, விஷு காலங்களிலும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளன்றும் மட்டுமே சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய முடியும்.
சபரிமலை தரிசனத்திற்குச் செல்கின்றவர்கள் முன்னதாக 41 நாட்கள் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பரம்பரைக் காட்டுப்பாதை வழியாகவும், பம்பை வழியாகவும் கோயிலுக்குச் செல்லலாம். பம்பை வழியாகச் செல்வது, காட்டுப்பாதை வழியாகச் செல்லும் அளவுக்குக் கடினமாக இருக்காது.