கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் நிலைக்கல் என்னும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இது முக்கியமான ஒரு சிவன் கோயில். சபரிமலை செல்லும் பக்தர்களின் ஒரு முக்கிய இடைத்தாவளமாகவும் (பயணத்தின் இடையே ஓய்வு எடுக்கும் இடம்) இது விளங்குகின்றது. இது திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் கீழ் உள்ளது. சபரிமலைப் பயணத்தின்போது ஏராளமானோர் இங்குவந்து தரிசனம் செய்து செல்வர். உக்கிரமூர்த்தி, மங்களப் பிரதாயகன் என்னும் இரண்டு நிலைகளில் சிவபெருமான் இங்கு குடிகொண்டுள்ளார். இங்குள்ள சிவபெருமான், தீய சக்திகளுக்கு எதிராகப் போராட ஐயப்பனுக்கு அருள்புரிந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பிற சிவன் கோயில்களைப் போலவே இங்கும் ஏராளமான காளைமாடுகள் பாதுகாக்கப்படுகின்றன.
இங்கு இரண்டு உபதெய்வங்கள் மட்டுமே உள்ளனர். பகவான் கன்னிமூலை கணபதியும் நந்தியும்.
ஒவ்வொரு நாளும் மூன்று பூஜைகள் நடைபெறுகின்றன. காலையில் உஷ பூஜை, மதியம் உச்சிக்கால பூஜை, மாலையில் தீபாராதனை. ஞாயிறு, திங்கள், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்புப் பூஜை நாட்களாகும்.
ஆண்டுதோறும் கொண்டாடப்படு மகாசிவிராத்திரி விழா இக்கோயிலின் முக்கிய விழாவாகும். ஆண்டுதோறும் ‘திரு உத்சவம்’ என்னும் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சபரிமலைப் புனிதப் பயணக் காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டவனின் அருள்தேடி இங்கு வரக் காணலாம்.