பூஜை நேரங்கள்

மண்டலமகரவிளக்கு உற்சவக் காலம்

பூஜை

நேரம்

        காலைநேரப் பூஜை

 

ஸ்ரீகோயில் நடை திறப்பு
நிர்மால்யம்
அபிஷேகம்

காலை 3.00 மணி

கணபதி ஹோமம்

காலை 3.30 மணி

நெய்யபிஷேகம்

காலை 3.30 முதல் 7.00 மணி வரை

உஷ பூஜை

காலை 7.30 மணி முதல்

நெய்யபிஷேகம்

காலை 8.30 முதல் 11.00 மணி வரை

நெய்யபிஷேகம்/
நெய்த்தோணியில் விடப்பட்ட நெய்யால்

காலை 11.10 மணி

அஷ்டாபிஷேகம் (15 முறை)

காலை 11.00 முதல் 11.30 மணி வரை

உச்சிக்கால பூஜை

மதியம் 12.30 மணி

ஸ்ரீகோயில் நடை அடைப்பு

மதியம் 1.00 மணி

        மாலைநேரப் பூஜை

 

ஸ்ரீகோயில் நடை திறப்பு

மாலை 3.00 மணி

தீபாராதனை

மாலை 6.30 மணி

புஷ்பாபிஷேகம்

இரவு 7.00 முதல் 9.30 மணி வரை

அத்தாழ பூஜை

இரவு 9.30 மணி முதல்

ஹரிவராசனம்/
ஸ்ரீகோயில் நடை அடைப்பு

இரவு 11.00 மணி

நெய்யபிஷேகம்:

ஐய்யப்பனுக்கு செய்யும் அபிஷேகங்களில் மிகவும் முக்கியமானது நெய்யபிஷேகம். தேங்காயில் நிறைத்துக் கொண்டுசெல்லும் நெய்யால் இவ்வபிஷேகம் செய்யப்படுகிறது. காலையில் 4 மணிக்கு ஆரம்பாமாகும் நெய்யபிஷேகம் மதியம் ஒரு மணி உச்சிக்கால பூஜை வரை தொடரும். சுவாமி ஐயப்பனையும் உப பிரதிஷ்டைகளையும் தொழுது வணங்கியபின், குழுவாக வரும் ஐயப்ப பக்தர்கள், குருசாமியின் வழிகாட்டுதல்படி ஓரிடத்தில் ’விரி’ (தரையில் பெரிய ஒரு ஜமுக்காளம் விரித்தல்) விரிக்கிறார்கள். பின்னர் கொண்டுவந்த அத்தனை நெய்த்தேங்காய்களையும் விரியில் ஓரிடத்தில் அடுக்கி வைக்கிறார்கள்.

சன்னிதானத்தின் பின்னால் உள்ள திருநீற்றுக்குளத்தில் (பஸ்மக்குளம்) நீராடியபின், குருசாமி நெய்த்தேங்காய்களை உடைத்து அதிலுள்ள நெய்யை ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைக்கிறார். பின்னர் அது ஸ்ரீகோயில் நெய் அபிஷேகத்திற்குக் கொடுக்கப்படுகிறது. அபிஷேகம் செய்தபின் திருப்பிக்கிடைக்கும் கொஞ்சம் நெய்யைப் பக்தர்களுக்குப் பங்கிடுகிறார். அது திவ்வியப் பிரசாதமாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் யாராவது நெய்த்தேங்காய் கொண்டுவரவில்லையென்றால் தேவஸ்வம் போர்டிலிருந்து பிரசாத நெய் பெறுவதற்கான வசதியுள்ளது. இது ’ஆடியசிஷ்டம் நெய்’ (அபிஷேகம் செய்த மீதி நெய்) எனப்படுகின்றது.

நெய் மனிதனின் ஆன்மாவின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் ஆன்மாவானது இறைவனோடு இரண்டறக் கலப்பதாகக் கருதப்படுகிறது. நெய் ஜீவாத்மாவும் சுவாமி ஐயப்பன் பரமாத்வாவும் ஆகும்.

நெய்த்தேங்காயிலிருந்து நெய்யை எடுத்துவிட்டால், தேங்காய் வெறும் ஜடப்பொருள் (உயிரற்ற உடம்பு) ஆகிவிடுகிறது. கோயிலின் முன்னால் உள்ள பெரிய தீ ஆழியில் வெறும் தேங்காயை இடுவதன் நோக்கம் இதுதான்.

படி பூஜை: 

சில குறிப்பிட்ட நாட்களில் புனிதமான பதினெட்டு படிகளுக்கும் செய்யும் பூஜையே படிபூஜை. ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகம்  செய்தபின் இப்பூஜை நடத்தப்படும். மாலைநேரத்தில் படிபூஜை நடைபெறும். கோயில் மேல்சாந்தியின் (தலைமைப் பூஜாரி) முன்னிலையில் கோயில் தந்திரி இப்பூஜையை நடத்துவார். பதினெட்டு படிகளும் பூக்களாலும் பட்டுத்துணியாலும்  அலங்கரிக்கப்படும். ஒவ்வொரு படியிலும் திருவிளக்கு ஏற்றி வைக்கப்படும். தந்திரி ஆரதி எடுப்பதுடன் பூஜை நிறைவுபெறும். சுமார் ஒருமணி நேரம்படிபூஜை நடைபெறும்.

உதயாஸ்தமன பூஜை:

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை செய்யும் பூஜை ‘உதயாஸ்தமன பூஜை எனப்படும். இப்பூஜை காலையில் நிர்மால்யம் முதல் இரவு அத்தாழ பூஜை வரையிலான பூஜைகளாகும். நித்திய பூஜைகளுடன், ஐயப்பசுவாமியின் அருள் கிடைக்கவும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் பக்தர்கள் அர்ச்சனை, அபிஷேகங்கள் முதலான சிறப்புப் பூஜைகளைச் செய்கின்றனர். பதினெட்டு தினசரிப் பூஜைகளில் பதினைந்து பூஜைகள் மதியத்திற்கு முன் செய்யப்படுகின்றன. 45 கலசாபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

கலசபூஜை:

சஹஸ்ர கலசம்: சஹஸ்ர கலச பூஜை என்பது ஆயிரம் கலசங்களால் செய்யும் பூஜை. தந்திரிக, வேத, ஆகம, சாஸ்திரப்படி ஹரிஹரபுத்திரனாம் ஸ்ரீதர்ம சாஸ்தாவுக்கு இப்பூஜை செய்யப்படுகின்றது. ஆண்டவன் அருள் கிடைக்கவேண்டும், மனிதகுலம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுவே இப்பூஜையின் நோக்கம். தங்கம், வெள்ளி அல்லது செம்பில் செய்யப்பட்ட புனிதக் கலசங்களில் அபூர்வமான ரத்தினக் கற்கள், ஏழு கடல்கள், புனித நதிகள் இவற்றைக் கலசங்களில் உள்ளடக்கியதாகக் கற்பிதம் செய்துகொண்டு, தூய சக்திகளை வணங்கி முறையிடுவதாகக் கலசபூஜை அமையும்.

உற்சவபலி:

பாணி என்னும் கருவியை இசைத்துக்கொண்டு உற்சவபலி பூஜை ஆரம்பமாகும். பூதகணங்களுக்காக இப்பூஜை நடத்தப்படுகிறது. ஐயப்பனுக்குத் துணைநிற்கும் பூதகணங்களை வரவழைக்கவே பாணி இசைக்கப்படுகின்றது. பின்னர், பூதகணங்களுக்காக நாலம்பலத்தைச் சுற்றியும் பலிக்கல் புரையிலும் வைக்கப்பட்டிருக்கும் பலிக்கற்களை மூடும் நிலையில் வேகவைத்த அரிசிச் சோற்றை தூவுவர் (உற்சவபலி தோவல்). கோயில் தந்திரியே இதைச் செய்வார்.   பின்னர் சப்த மாதர்கள் மீதும் அரிசிச் சோற்றைத் தூவியபின், ஐயப்பனின் திருவுருவம் பொறித்த ’திடம்பு’ ஸ்ரீகோயிலுக்கு வெளியே கொண்டுவரப்படும் . அதனை பக்தர்கள் வணங்கி வழிபடுவாகள். ஐயப்பசுவாமிக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவையொட்டி உற்சவபலி நடத்தப்படுகிறது.

புஷ்பாபிஷேகம் (மலர் அபிஷேகம்):

பகவான் ஐயப்பனின் மீது மலர் தூவி வழிபடுவதே புஷ்பாபிஷேகம். தாமரை, செவந்தி, அரளி, துளசி, முல்லை, கூவளம்(வில்வ இலை) ஆகிய மலர்களும் இலைகளும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வபிஷேகம் செய்ய விரும்புகின்றவர்கள் முன்னதாகப் பதிவு செய்யவேண்டும். இதற்கான செலவு ரூபாய் பத்தாயிரம் (10,000) ஆகும்.

அஷ்டாபிஷேகம்:

எட்டு பொருட்களால் செய்யும் அஷ்டாபிஷேகம் சுவாமி ஐயப்பனுக்குச் செய்யும் அபிஷேகங்களில் முக்கியமான ஒன்று.

சபரிமலையில் அஷ்டாபிஷேகத்திற்குப் பயன்படுத்தும் பொருள்கள்:

  • விபூதி
  • பால்
  • தேன்
  • பஞ்சாமிர்தம்
  • இளநீர்
  • சந்தனம்
  • பன்னீர்
  • தண்ணீர்

(இந்துக் கோயில்களில் செய்யப்படும் அஷ்டாபிஷேக வழிபாடு கோயிலுக்குக் கோயில் மாறுபடும் என்பது கவனிக்கத்தக்கது)

களபாபிஷேகம் (சந்தன அபிஷேகம்):

கோயில் மூர்த்தியின் சைதன்யத்தை மேம்படுத்தும் பொருட்டு செய்யப்படும் சிறப்புப் பூஜைகளில் ஒன்று களபாபிஷேகம். களபாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கோயில் மேல்சாந்தியின் முன்னிலையில் தந்திரி நாலம்பலத்தில் களப கலசபூஜை நடத்துவார்.

சுவாமி ஐயப்பனின் திருவுருவத்தில் சந்தனக் குழம்பைத் தேய்ப்பதுடன் களப கலசாபிஷேகம் நிறைவடையும். கோயில் தந்திரி இப்பூஜையை நடத்துவார். உச்சிக்கால பூஜை நேரத்தில், ஐயப்பனின் தங்கத் திருவுருவம் கோயிலைச் சுற்றி வலம் வரும் வேளையில் களப கலசபூஜை நடத்தப்படும்.

லட்சார்ச்சனை:

அர்ச்சனை என்பது கடவுளின் திருநாமங்களை உருவிட்டு வணங்கி வழிபடுவது. இவ்வாறு ஆண்டவனின் ஒருலட்சம் திருநாமங்களை மந்திரம்போல் உருவிட்டு வழிபடுவதே லட்சார்ச்சனை.

மேல்சாந்தி மற்றும் பிற பூஜாரிகளுடன் உதவியுடன் தந்திரி சபரிமலை சன்னிதானத்தில் லட்சார்ச்சனை நடத்துவார். இதை ஒட்டி உச்சிக்கால பூஜைக்கு முனதாக லட்சார்ச்சனைக்கான ‘பிரம்மகலசம்’ ஊர்வலமாக ஸ்ரீகோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும்.