உபதேவதைகள்

நாகராஜா: கோயில் சன்னிதானத்துக்கு மிக அருகிலாக நாகராஜா கோயில் உள்ளது. சுவாமி ஐயப்பனையும் கன்னிமூலை கணபதியையும் வணங்கிய பின் பக்தர்கள் நாகராஜாவை வணங்கிப் பூஜைப் பொருட்களை அர்ப்பணிக்கின்றனர்.

வாவருநடை: வாவர் என்பவர் வாவருசுவாமி எனவும் அறியப்படுகின்றார். ஓர் இஸ்லாமிய சன்னியாசியாக இருந்த இவர் பின்னர் ஐயப்பசுவாமியின் பக்தர் ஆனார். வாவரு சுவாமிக்கான ஓர் இருப்பிடம் சபரிமலையில் உள்ளது. மேலும் எருமேலி என்னும் இடத்தில் எருமேலி சாஸ்தா கோயிலின் பக்கத்தில் வாவரு சுவாமியின் பள்ளியும் உள்ளது. சபரிமலை மண்டலக் காலத்தில் எருமேலிப் பள்ளி கேரளத்தின் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கக் காணலாம். பல்வேறு நம்பிக்கை கொண்டவர்களும், இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம் போன்ற வேறுபட்ட  மதத்தவர்கள் ஆனாலும் எல்லோரும் சமம் என்னும் உணர்வை ஏற்படுத்துவதாக சபரிமலை விளங்குகின்றது.

மாளிகைப்புறத்து அம்மை: சபரிமலையில் உள்ள உபதேவதைகளில் மிகவும் முக்கியமானவர் மாளிகைப்புறத்து அம்மை. அம்மையைக் குறித்து இரண்டு விதமான நம்பிக்கைகள் உள்ளன. ஐயப்பனுடன் போர் செய்தவள் மஹிஷி என்னும் துர்தேவதை. அவள் தோற்று வீழ்ந்தபின் அவளது உடம்பிலிருந்து அழகான ஒரு பெண் தோன்றினாள். அவள் அய்யப்பனுடன் இருக்க ஆசைப்பட்டாள். அவள்தான் அந்த அம்மை என்பது ஒரு நம்பிக்கை. ஐயப்பனின் குருவின் மகள் சன்னியாசியாகி ஐயப்பனுடன் இருக்க ஆசைப்பட்டாள். அவளே மாளிகைப்புறத்து அம்மை என்பது இரண்டாவது நம்பிக்கை. தாந்திரிக முறைப்படி பக்தர்கள் மாளிகைப்புறத்து அம்மையை ஆதிபராசக்தியாக வழிபடவேண்டும்.  மாளிகைப்புறத்து அம்மைக்கான முக்கிய வழிபாட்டுப் பொருள்கள் மஞ்சள்பொடி, குங்குமம், சர்க்கரை, தேன், கதளிப்பழம், சிவப்புப் பட்டு ஆகியனவாகும்.

கறுப்புசுவாமி, கறுப்பை அம்மை: சபரிமலை படினெட்டாம் படியின் வலது பக்கமாக கறுப்புசுவாமி கோயில் உள்ளது. கறுப்பை அம்மையும் அங்கு குடிகொண்டுள்ளாள். காட்டுவாசிகளாக இருந்த அவர்கள் ஐயப்பனின் புனிதப் பயணத்தின்போது மிகவும் உதவியதாகவும், அவர்கள் திவ்விய சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

வலிய கடுத்த சுவாமி: பதினெட்டாம் படியின் இடதுபுறமாக வலிய கடுத்த சுவாமி கோயில் உள்ளது. அவர் ஐயப்பனின் உதவியாளராக இருந்தவர்.

மேல் கணபதி: சன்னிதானத்தில் ஸ்ரீகோயிலின் பக்கத்தில் மேல் கணபதி பிரதிஷ்டை உள்ளது. கணபதிக்கு வழிபாடாக உடைக்கப்பட்ட நெய்த்தேங்காய் தீ ஆழியில் இடப்படுகின்றது. கணபதி ஹோமம் முக்கிய வழிபாடாகும்.